3/12/2024 பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷

குறள் : 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்

✍️  டிசம்பர்- 3
*பெட்ரோல்விலை*-100.75
  *டீசல் விலை*-92.34

✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K  தங்கம்/ g : ₹ 5860
22 K தங்கம்/ g. : ₹ 7090
 வெள்ளி    /g   : ₹ 100.00

✍️ *திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு*

திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருப்பதை கண்டு, மீட்புக்குழுவினரே கண்ணீர் விட்டனர்.

✍️ *நிரம்பிய தடுப்பணைகள்; கடலுக்கு பாய்கிறது உபரிநீர்*

மாமல்லபுரம்: வாயலுார் பாலாற்று தடுப்பணை நிரம்பி, உபரிநீர் கடலுக்கு பாய்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வழியே கடக்கிறது. கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் இடையே, வங்கக் கடலில் கலக்கிறது.

✍️ *மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு*

கரையை கடந்த 'பெஞ்சல்' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று(டிச., 3) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

✍️ *52 ஆண்டுகளுக்கு பின் தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு*

திருக்கோவிலூர்: பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால், தென்பெண்ணையில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

✍️ *மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பு*

திருவெண்ணெய்நல்லுார் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

✍️ *புயல் நிவாரணம் ரூ.5,000 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு*

'பெஞ்சல் புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

✍️ *நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 25 மலை கிராமங்கள் துண்டிப்பு*

வேலூர்: நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 25 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

✍️ *ஓய்வூதிய பணப்பலன் ரூ.3500 கோடி பாக்கி*

'தமிழகத்தில் 18 மாதங்களில் போக்குவரத்துக் கழகஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் ரூ.3500 கோடி வரை அரசு பாக்கி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொது செயலாளர் கே.ஆறுமுகநயினார் குற்றம்சாட்டினார்.

✍️ '*உள்கட்சி தேர்தலில் நிற்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்'*

சென்னை : ''உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான், கட்சியின் எதிர்காலமும், நிர்வாகிகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

✍️ '*பில்டப்' கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊத்தங்கரையில் பழனிசாமி ஆவேசம்*

எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்காமல், ஆட்சி அதிகார மமதையில் தமிழக முதல்வர், 'பில்டப்' மட்டும் கொடுத்து வருகிறார்.

மக்கள் பிரச்னை, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, வானிலை மையத்தின், 'ரெட் அலெர்ட்'டை கவனிக்காததால், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

இவ்வாறு, அவர் கூறினார்.

✍️ *சிவகங்கை கலெக்டரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்*

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை தமிழக அரசே நடத்த வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்களை கண்டுகொள்ளாததாக கூறி கலெக்டர் ஆஷா அஜித்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

✍️ *புயலால் 48 ரயில்களின் சேவையில் பாதிப்பு*

'பெஞ்சல்' புயல் பாதிப்பால், சென்னைக்கு வர வேண்டிய, 25 ரயில்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, 23 ரயில்கள் என, மொத்தம், 48 ரயில்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு, சென்னை வந்த, 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

✍️ *மின் கட்டணம்; 6 மாவட்டத்திற்கு அவகாசம்*

'பெஞ்சல்' புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, அபராதம் இன்றி செலுத்த, வரும் 10ம் தேதி வரை, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, புயலால் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அங்குள்ள மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் வைத்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.

✍️ *விழுப்புரத்தில் வெள்ள நீர் புகுந்ததால் 1,500 சிறு தொழில்கள் பாதிப்பு*

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 1,500க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் தண்ணீர் உட்புகுந்ததால், கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

✍️ *விரைவில் மழை நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் உறுதி*

மழை முழுதுமாக நின்று, தேங்கிய நீர் வடிந்த பின், முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களை உடனே மீட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் பணிகளை செய்ய, அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அறிக்கை, விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மழை சேதங்களை பார்வையிட உடனே குழுவை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கைகளை, தமிழக அரசு சார்பில் வைக்க உள்ளோம்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

✍️ *ரயில் சேவை பாதிப்பு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்*

சென்னை, புயல் பாதிப்பால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு செல்ல, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

✍️ *இடைக்கால நிவாரணம் ரூ.2,000 கோடி பிரதமருக்கு முதல்வர் கடிதம்*

சென்னை, தமிழகத்தில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

✍️ *கொலை வழக்கில் கைதான மாணவர்கள் மருத்துவமனையில் பணிபுரிய உத்தரவு*

சென்னையில் மாநில கல்லுாரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், கைதான பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

மாணவர்கள் நால்வரும் மறு உத்தரவு வரும் வரை, ராஜிவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிய வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

✍️ *2 ஆண்டு காத்திருப்புக்கு பின் கிடைத்தது கொரோனா கால நர்ஸ்களுக்கு வேலை*

சென்னைகொரோனா காலத்தில் பணியாற்றிய நர்ஸ்களுக்கு, இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின், தற்போது அரசு மருத்துவமனைகளில் வேலை கிடைத்துள்ளது.தமிழகத்தில், 2020ல் கொரோனா காலத்தின் போது, தற்காலிக பணியில், 2,375 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டனர்.

✍️ *கஸ்துாரிக்கு விதித்த நிபந்தனை தளர்வு*

சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், நடிகை கஸ்துாரி தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை, நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளது.

✍️ *கனிமொழிக்கு எதிராக அவதுாறு கருத்து பா.ஜ., நிர்வாகி எச்.ராஜாவுக்கு சிறை*

சென்னை, சமூக வலைதளத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தது; ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவோம் என, பதிவு வெளியிட்டது தொடர்பான இரண்டு வழக்குகளில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு, தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

✍️ '*ஆன்லைன்' வினாடி - வினா வானிலை துறை அறிவிப்பு*

தேசிய அளவில் வானிலை ஒலிம்பியாட் போட்டிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, எட்டு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய, மாநில அளவில், ஆன்லைனில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இவற்றில் பங்கேற்க விரும்புவோர், https://mausam.imd.gov.in/met-oly/ என்ற இணையதளம் வாயிலாக, டிச., 10 இரவு 11:59 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மாநில அளவிலான போட்டிகள், டிச., 14, 15ம் தேதிகளில் நடக்கும். இதன் முடிவுகள், டிச., 17ல் அறிவிக்கப்படும்.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

பாடி பா.கார்த்திக்
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments